கோலாலம்பூர்,
மலேசியாவின் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லிஸ் மாநிலம் முழுவதும், கெடாவில் கூபாங் பாசு, பாடாங் தெராப், பொக்கோக் சேனா ஆகிய பகுதிகளிலும், பகாங்கில் மாரான், பெரா, தெமர்லோ, பெந்தோங் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரில் கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங், உலு சிலாங்கூர் ஆகிய பகுதிகளுடன் கோலாலம்பூருக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நெகிரி செம்பிலானின் ஜெலேபு, ஜோகூரின் பொந்தியான், ஜோகூர் பாரு, கூலாய், மெர்சிங் ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சரவாக்கில் லிம்பாங் மற்றும் மிரியின் சில பகுதிகளும், சபாவில் தாவாவ், பென்சியாங்கான், தம்புனான் மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளும் இந்த வானிலை எச்சரிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மணிக்கு 20 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியுடன் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்படும்போது இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாக மெட்மலேசியா விளக்கமளித்துள்ளது. ஒவ்வொரு முறையும் வெளியிடப்படும் இந்தக் குறுகியகால வானிலை எச்சரிக்கை அதிகபட்சமாக ஆறு மணி நேரம் வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















