தாக்குதலில் துண்டிக்கப்பட்ட காவலரின் கையை மீண்டும் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றி

கெப்போங்கில் ஒரு வெளிநாட்டவர் நடத்திய  தாக்குதலில் காயமடைந்த காவல்துறை அதிகாரியின் துண்டிக்கப்பட்ட வலது மணிக்கட்டை மருத்துவர்கள் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாகவும், கோலாலம்பூர் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினருக்கு  சுகாதார அமைச்சர்  சுல்கெஃப்ளி அஹ்மத் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

அறுவை சிகிச்சை நுண்ணோக்கியைப் பயன்படுத்தி மிகத் துல்லியமாகச் செய்ய வேண்டியிருந்த, எட்டு மணி நேர இந்த செயல்முறையை வெற்றிகரமாக முடித்த, டாக்டர் ஆலன் ரவி ராஜகோபால் மற்றும் டாக்டர் அஜீஸ் சப்பிர் ஹுசைன் தலைமையிலான மேல் கை மற்றும் நுண் அறுவை சிகிச்சை துணை சிறப்பு மருத்துவக் குழுவிற்கு எனது சிறப்புப் பாராட்டுகள்  என்று அவர் முகநூலில் கூறினார்.

தாக்குதலில் காயமடைந்த லான்ஸ் கார்ப்பரல் தியரி ரோட்ஜர் ஃபெண்டிக்கு ஏற்பட்ட தலைக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைக் குழுவினருக்கும் சுல்கெஃப்லி வாழ்த்து தெரிவித்தார். பொது சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் பல்துறை மருத்துவ சேவைகளின் சிறந்த தரத்தை இந்த அறுவை சிகிச்சை எடுத்துக்காட்டுகிறது என்று அமைச்சர் கூறினார்.

நேற்று கெப்போங் டேசா அமான் புரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்,  ஆயுதம் ஏந்திய ஒரு வெளிநாட்டு நபரால் தாக்கப்பட்டதில், அதிகாரியின் வலது கை மணிக்கட்டுப் பகுதியில் துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு பிரதமர் அன்வர் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்ததோடு, அனைத்து குற்றச் செயல்களுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், அந்த அதிகாரி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததோடு, பாராட்டுக்குரிய அடையாளமாக RM5,000 வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்தத் தாக்குதல் குறித்த விவரங்களை அளித்த சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார், நேற்று மாலை 4 மணிக்கு, மனநிலை சரியில்லாத ஒருவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகப் பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து காவல்துறை அங்கு சென்றதாகக் கூறினார்.அடுக்குமாடி குடியிருப்பின் கதவைத் திறந்தபோது, ​​சந்தேக நபர் இரண்டு கத்தியைக் கொண்டு அவர்களைத் தாக்கினார். இந்தத் தாக்குதலில் 26 வயதான லான்ஸ் கார்ப்பரல் தனது கையை இழந்ததோடு, தலை மற்றும் உடலிலும் காயமடைந்தார்.

அங்கு இருந்த பல தீயணைப்பு வீரர்கள் மற்றும் சுகாதார அமைச்சகப் பணியாளர்களும் சிறு காயங்களுக்கு உள்ளானார்கள். சந்தேக நபர் தப்பி ஓடினார், ஆனால் இரவு 8 மணிக்கு அருகிலுள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். தன்னைக் கைது செய்ய முயன்ற காவல்துறை அதிகாரிகளை சந்தேக நபர் பரங் கத்தியால் தாக்கியதால், அவர்கள் பலமுறை சுட்டதாக ஷாசெலி கூறினார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சந்தேக நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here