முதலில் லாபம் கொடுத்து ஆசைகாட்டிய மோசடிக் கும்பல்! WhatsApp முதலீட்டில் RM80,000 இழந்த ஓய்வுபெற்றவர்!

கோலா திரெங்கானு,

WhatsApp மூலம் அறிமுகமான போலி முதலீட்டுத் திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை முதலீடு செய்த 63 வயது ஓய்வுபெற்ற ஆடவர் ஒருவர், RM80,000 பணத்தை இழந்து மோசடிக்குள்ளாகியுள்ளார்.

கோலா திரெங்கானுவைச் சேர்ந்த குறித்த ஆடவர், இம்மாத தொடக்கத்தில் தனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் இணைய முதலீட்டுத் திட்டம் ஒன்றில் இணைந்துள்ளார். குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என வழங்கப்பட்ட வாக்குறுதியை நம்பி, தனது ஓய்வூதியச் சேமிப்பிலிருந்து RM93,525 முதலீடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 11ஆம் தேதி அவருக்கு RM18,000 லாபமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டுத் திட்டத்தின் மீது நம்பிக்கை அதிகரித்த அவர், மறுநாளான நவம்பர் 12ஆம் தேதி மூன்று பரிவர்த்தனைகள் மூலம் மேலும் RM80,000 செலுத்தியுள்ளார்.

ஆனால், இரண்டாவது முதலீட்டிற்கான லாபம் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, முதலீட்டுத் தொகை RM100,000 என்ற வரம்பை எட்டவில்லை எனக் கூறிய மோசடிக்காரர்கள், லாபத்தைப் பெற்றுக்கொள்ள மேலும் RM50,000 செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த ஆடவர், தான் மோசடிக்குள்ளாகியிருப்பதை உணர்ந்து நேற்று மாலை 6.20 மணியளவில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர், குற்றவியல் சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here