கல்யாணக் கனவுடன் கனடாவில் இருந்து இந்தியா வந்த 61 வயது பெண்… காதலன் கொடுத்த அதிர்ச்சி முடிவு…

புதுடெல்லி, ஆன்லைனில் காதல் மலர்ந்தால் எல்லாமே சுபமாக முடிந்து விடுமா என்ன? கனடாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்து இந்திய காதலரைத் திருமணம் செய்ய வந்த 61 வயது பெண்ணுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திருமணத்துக்கு இளைஞர் மறுப்பு தெரிவித்ததால், விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

டேட்டிங் செயலியில் தொடங்கிய காதல்
கனடாவைச் சேர்ந்த பெண்ணுக்கும், அரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நிதின் என்ற இளைஞருக்கும் சுமார் ஓராண்டுக்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல், நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து காதலுக்கு எல்லையேது என்ற எண்ணத்துடன் அந்தப் பெண் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு புறப்பட்டு, கடந்த 11-ந்தேதி டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்துக்கே நேரில் சென்று காதலியை வரவேற்ற நிதின், அவரை ராஜஸ்தானின் நீம்ரானா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

திருமணப் பேச்சில் வந்த திருப்பம்
நிதினின் உறவினர்கள் வீட்டில் இருவரும் 2 நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அப்போது திருமணம் குறித்த பேச்சுகளும் நடைபெற்றுள்ளன. ஆனால், காதல் கதையில் எதிர்பாராத திருப்பமாக பெண்ணின் வயது சுமார் 61 என்பது தெரியவந்த தாகக் கூறப்படுகிறது.

பார்ப்பதற்கு இளமை தோற்றத்துடன் காணப்பட்ட அந்த பெண் 60 வயது மூதாட்டி என தெரியவந்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள நிதின் மறுத்துள்ளார். ஆன்லைனில் ஓராண்டு வளர்ந்த காதல், நேரில் சந்தித்த சில நாட்களிலேயே தடுமாறியதால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

தூதரகத்துக்கு சென்ற காதல் விவகாரம்
இதனால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், நவம்பர் 13-ந்தேதி கனடா தூதரகத்தைத் தொடர்புகொண்டு நடந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தூதரகம் அளித்த தகவலின்பேரில் நீம்ரானா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நிதினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடா பெண் கோட்புட்லியில் உள்ள கோர் சென்டரில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

பேசுபொருள்
தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நிதினிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணக் கனவுடன் கனடாவில் இருந்து இந்தியா வந்த பெண்ணுக்கு கடைசியில் போலீஸ் நிலையம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here