மும்பையில் மின்சார ஆட்டோ ஓட்டி அசத்திய பிரிட்டன் இளவரசர்!…

மும்பை, இந்தியா வருகை தந்த பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி ஆகியோர், மும்பையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோவை ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

கடல் பாலம் பின்னணியில் ஆட்டோ சவாரி
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு நேற்று (திங்கட்கிழமை) வருகை தந்தனர். இதையடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் இளவரசர் வில்லியமால் தொடங்கப்பட்ட ‘எர்த்ஷாட் பரிசு 2026’ வழங்கும் விழா மும்பையில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, தனது பயணத்தின் 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மும்பை பாந்த்ரா-வொர்லி கடல் பாலத்தின் பின்னணியில் அமைந்துள்ள பாந்த்ரா ரெக்லமேஷன் பூங்காவிற்கு இளவரசர் வில்லியம் வருகை தந்தார்.

ஆட்டோ ஓட்டுநரான இளவரசர்
அப்போது, ‘எர்த்ஷாட் பரிசு’ இறுதிப் போட்டியாளர்கள் 15 பேரைச் சந்திப்பதற்காக, இந்தியாவின் ‘மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி’ நிறுவனம் தயாரித்த மின்சார ஆட்டோவை இளவரசர் வில்லியம் தானே ஓட்டி வந்தார். ஆட்டோவின் பின் இருக்கையில் இளவரசி கேட் மிடில்டன் அமர்ந்து புன்னகையுடன் பயணம் செய்தார்.

களைகட்டிய மும்பை பயணம்
பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இளவரசர் மேற்கொண்ட இந்த பயணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, தனது பயணத்தின் முதல் நாளான நேற்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து இளவரசர் தம்பதியினர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், மண் குவளையில் டீ அருந்தியதோடு, மும்பை மெட்ரோ ரெயிலிலும் பயணம் செய்து மக்களோடு மக்களாகக் கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here