இறுதி சடங்கு: வி.எஸ். பாபுவின் உடலை தோளில் சுமந்து சென்ற முதல்-அமைச்சர் விஜய்…

சென்னை, 2026 தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் வி.எஸ்.பாபு.

உடல்நலக்குறைவு
இவர் பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி திடீரென்று வி.எஸ்.பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். உடனே குடும்பத்தினர் அவரை, அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய உடல் நிலை குறித்து அவ்வப்போது, மருத்துவ அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வந்தன. செப்டம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதிவரை ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

வதந்தி-வழக்கு
அதன் பிறகு அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் ஆஸ்பத்திரி சார்பில் வெளியிடப்படவில்லை. இதனால் அவரது உடல் நிலை குறித்து, வதந்திகளும் காட்டுத் தீ போல பரவின. தவறான தகவல்களும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அவரது உடல் நலம் குறித்த உண்மை நிலையை வெளியிட வேண்டும் என்று கோர்ட்டிலும் சிலர் வழக்கு தொடுத்து இருந்தனர்.

இந்தநிலையில், நேற்று தீவிர சிகிச்சையில் இருந்த வி.எஸ்.பாபுவின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆஸ்பத்திரி முன்பு காலை முதலே போலீசார் குவிக்கப்பட்டனர்.

மரணம்
இந்தநிலையில், 72 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்த வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. வி.எஸ்.பாபு மரணம் அடைந்ததை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரி நிர்வாகம் பிற்பகல் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுதொடர்பாக ஆஸ்பத்திரி வெளியிட்ட அறிக்கையில், “நீண்டகால சுவாசப்பிரச்சினை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ந்தேதி வி.எஸ்.பாபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.

டாக்டர்களின் தொடர் சிகிச்சை மற்றும் தீவிர முயற்சிகளுக்குப் பின்னரும், அவரது உடல்நிலை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, பிற்பகல் 2.24 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது” என்று கூறப்பட்டிருந்தது.

விஜய் அஞ்சலி
வி.எஸ்.பாபு மரணச் செய்தியை அறிந்ததும் த.வெ.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் மிகுந்த சோகத்துடன் இருந்தனர். ஆஸ்பத்திரிக்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆஸ்பத்திரி நடைமுறைகள் முடிந்த பிறகு வி.எஸ்.பாபுவின் உடல் மாலை 5 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட அமரர் ஊர்தி வாகனம் மூலம் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து, மாலை 6.40 மணியளவில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், த.வெ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

உடல் தகனம்
வி.எஸ்.பாபுவின் உடலுக்கு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று மாலை அவருடைய இறுதி ஊர்வலம் நடந்தது. இதனைத்தொடர்ந்து திரு.வி.க.நகர் தாங்கல் மின்மயானத்தில் வி.எஸ்.பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக மறைந்த எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடலை அவரது உறவினர்களோடு சேர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்யும் தனது தோளில் சுமந்து சென்றார்.

அவருடன் கூட்டணி கட்சி தலைவர்களும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இறுதி ஊர்வலத்தில் வி.எஸ். பாபுவின் மகனை கைகளால் அரவணைத்தபடி விஜய் நடந்து சென்றார்.

மறைந்த எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு பரிமளா என்ற மனைவியும், ராம்பிரகாஷ், சதீஷ், விக்னேஷ், பாலசுப்பிரமணி ஆகிய 4 மகன்களும் மற்றும் சரிதா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here