அமானா மாநாட்டில் அஸ்மின் அலி! கரவொலியுடன் வரவேற்பு – PH, பெர்சத்து அரசியல் உறவில் புதிய திருப்பமா?

ஷா ஆலாம்:

ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற அமானா கட்சியின் தேசிய மாநாட்டில், பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கலந்துகொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையிலான அரசியல் உறவில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், அஸ்மின் அலியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஷா ஆலாம், செக்‌ஷன் 7இல் உள்ள தேவான் ராஜா மூடா மூசாவில் நடைபெற்ற அமானா தேசிய மாநாட்டிற்கு இன்று காலை நீல நிற உடையணிந்து அஸ்மின் அலி வருகை தந்தார்.

அப்போது, அமானா தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபு மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஜாஹிட் யூசோப் ராவா ஆகியோருடன் அவர் நட்புறவுடன் உரையாடியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் அமானா பொதுச் செயலாளருமான முகமட் ஃபாயிஸ் ஃபாட்சில், அஸ்மின் அலியின் பெயரை அறிவித்ததும் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள் கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர்.

அரசியல் ரீதியாக வெவ்வேறு அணிகளில் செயல்பட்டு வந்த தலைவர்கள் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்ட இந்த நிகழ்வு, அங்கு கூடியிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த மாநாட்டில் பிகேஆர் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருணும் கலந்துகொண்டார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் அமானா தேசிய மாநாட்டில், கட்சித் தலைவர் முகமட் சாபு தலைமையுரையாற்றிய பின்னர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார்.

ஷெரட்டன் நடவடிக்கைக்குப் பின்னர் மாறிய அரசியல் பாதை!

ஒருகாலத்தில் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராகவும், சிலாங்கூர் மந்திரி பெசாராகவும், 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அமைந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் பொருளாதார விவகார அமைச்சராகவும் அஸ்மின் அலி பதவி வகித்திருந்தார்.

ஆனால், 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது, அஸ்மின் அலியும் டத்தோ ஸுரைடா கமாருடினும் பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அவர்களுடன் மேலும் ஒன்பது பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து வெளியேறினர்.

மலேசிய அரசியலில் ‘ஷெரட்டன் நடவடிக்கை’ என்று அழைக்கப்பட்ட அந்த அரசியல் மாற்றம், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

பெர்சத்து கட்சி பக்காத்தான் ஹராப்பானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, 22 மாதங்கள் ஆட்சி செய்த கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்ததுடன், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

அதன் பின்னர் சுமார் ஆறு மாதங்கள் கழித்து பெர்சத்து கட்சியில் இணைந்த அஸ்மின் அலி, முகைதீன் தலைமையிலான அரசாங்கத்தில் அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

2024ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அவர் பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பிகேஆருக்குத் திரும்பமாட்டேன் என அறிவித்த அஸ்மின்!

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அஸ்மின் அலியுடன் மீண்டும் இணைந்து செயல்படப் போவதில்லை என்று பிகேஆர் தெரிவித்திருந்தது.

அதே ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அஸ்மின் அலி, தற்போதைய சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் தோல்வியடைந்தார்.

இருப்பினும், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் உலு கிள்ளான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, பக்காத்தான் ஹராப்பானின் ஜுவைரியா சுல்கிஃப்லியை 1,617 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிகேஆர் கட்சிக்குத் தாம் ஒருபோதும் திரும்பப்போவதில்லை என்று அஸ்மின் அலி அறிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அஸ்மின் அலிக்கு மீண்டும் கட்சியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தமக்குத் தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

கடந்த மே மாதம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் மீண்டும் இணையத் திட்டமில்லை என்று பெர்சத்து கட்சி மறுத்திருந்தது.

எனினும், நவம்பர் 11ஆம் தேதி மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது, பக்காத்தான் ஹராப்பானுடன் கடைசி நேர அரசியல் புரிந்துணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெர்சத்து முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அஸ்மின் அலி தெரிவித்திருந்தார்.

அண்மையில் நிறைவடைந்த மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது, அமானா கட்சிக்கு ஆதரவாக அஸ்மின் அலி பிரசாரம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில், அமானா தேசிய மாநாட்டில் அவர் கலந்துகொண்டதும், பேராளர்கள் கரவொலியுடன் வரவேற்றதும் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெர்சத்து இடையிலான எதிர்கால அரசியல் ஒத்துழைப்பு குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த வருகை இரு தரப்பினருக்கும் இடையிலான புதிய அரசியல் கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அமையவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here