படப்பிடிப்பின்போது நடிகைக்கு பாலியல் தொல்லை? ஆறு பேரிடம் போலீசார் விசாரணை!

கோலாலம்பூர்,

அண்மையில் நாடகப் படப்பிடிப்பின்போது நடிகர் ஒருவர் தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை ஆறு பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புகார் அளித்த நடிகை, அவரது தனிப்பட்ட உதவியாளராகவும் இருக்கும் வருங்கால கணவர், குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர், நாடகத்தின் இயக்குநர் மற்றும் சாட்சிகளான இரண்டு ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் எஸ்ஏசி சஸாலி ஆடம் தெரிவித்தார்.

மேலும், படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த குறைந்தது 25 பேரிடம் கட்டம் கட்டமாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தற்போது வேறு படப்பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்களின் நேர வசதிக்கேற்ப விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, நாடகப் படப்பிடிப்பின்போது நடிகர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here