சிரம்பான்:
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் அறையில் படிவம் 3 மாணவன் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பாலியல் ரீதியான வீடியோவைக் காண்பித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், 29 வயது ஆசிரியர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தாம் குற்றமற்றவர் என மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஓத்மான் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட முகமது ஃபாரிஸ் அர்-ராதி முகமது ஃபட்சில் என்ற அந்த ஆசிரியர், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, விசாரணை கோரினார்.
முதல் குற்றச்சாட்டின்படி, 14 வயது 8 மாதங்களே ஆன அச்சிறுவனுடன் ஆசிரியர் என்ற நம்பிக்கைக்குரிய உறவில் இருந்தபோதிலும், பாலியல் நோக்கத்திற்காக அம்மாணவனுக்கு உடல் ரீதியான பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் (AKSTKK) பிரிவு 14(d)-இன் கீழ் குற்றமாகும்.
இரண்டாவது குற்றச்சாட்டின்படி, அதே மாணவனுக்குத் தனது கைப்பேசி வழியாகச் சமூக ஊடகத்திலுள்ள பிறரது பாலியல் ரீதியான வீடியோவைக் காண்பித்து, உடல் சாரா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 15(e) மற்றும் பிரிவு 16(1)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.






















