புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், தேசிய புற்றுநோய் சங்கம் மலேசியா ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ‘Relay For Life Malaysia 2026 – Perak’ நிகழ்ச்சி வரும் நவம்பர் 29ஆம் தேதி சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை காலை 9.15 மணிக்கு பேராக் மாநில ராஜா பெர்மைசூரி துவாங்கு ஷாரா சலீம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார். அவரது வருகை இந்நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்ப்பதுடன், புற்றுநோய்க்கு எதிரான சமூகத்தின் கூட்டு முயற்சிக்கு ஊக்கமளிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய Pertubuhan Kebajikan Misrah Malaysia தலைவர் முகமாட் சைபூல் அன்வார் அமாட் ஷலவுடின் , ‘Relay For Life’ என்பது வெறும் ஓட்டம் அல்லது நடைப்பயிற்சி நிகழ்ச்சி மட்டுமல்ல. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ,அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவும், மனவலிமையும் அளிக்கும் ஒற்றுமையின் அடையாளமாகும் என கூறினார்.இதுவரை சுமார் 2,000 பேர் ஐந்து கிலோமீட்டர் தூர நன்கொடை ஓட்டத்தில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். இந்த ஓட்டம் காலை 7.30 மணிக்குத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேசிய புற்றுநோய் சங்கம் சார்பில் மருத்துவப் பரிசோதனைகள், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனை, சிறப்பு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை வாகனச் சேவையும் வழங்கப்படும்.இதனுடன் சுங்கை சிப்புட் மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் ரத்ததான முகாமும், சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ சார்பில் பொது வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வும் நடைபெறவுள்ளன.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதுடன், நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என முகமாட் சைபூல் அன்வார் அமாட் ஷலவுடின் தெரிவித்தார்.
எஸ்.லிங்கேஸ்வரன்















