ஏர் ஏசியாவுக்கு நிதியுதவி வழங்க அரசாங்கம் உறுதியளிக்கவில்லை! – அமிர் ஹம்சா

கோலாலம்பூர்:

உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஏர் ஏசியா குழுமத்தின் நிதி நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

எனினும், ஏர் ஏசியாவுக்குக் கடன் உத்தரவாதம் அளிப்பது அல்லது பொது நிதியைப் பயன்படுத்தி நிதியுதவி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த உடன்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என்றும் உறுதியளிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“குறிப்பாக சபா, சரவாக் மாநிலங்களில் பெரும்பாலான விமானச் சேவைகள் ஏர் ஏசியாவைச் சார்ந்திருப்பதால், அம்மாநிலங்களுக்கான விமானப் போக்குவரத்துச் சேவைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது,” என்றார் அவர்.

ஏர் ஏசியாவின் நிதி நிலைமை மற்றும் அரசாங்கம் தலையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாலிக் பூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் பக்தியார் வான் சிக் எழுப்பிய கேள்விக்கு, இன்று மக்களவையின் சிறப்பு அமர்வில் அமிர் ஹம்சா இவ்வாறு பதிலளித்தார்.

விமான நிறுவனம் எதிர்நோக்கும் சவால்களைப் புரிந்துகொள்ளவும் அதற்கான தீர்வு வழிகளைக் கண்டறியவும் விமானப் போக்குவரத்துத் துறையினர், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அரசாங்கம் பெற்று வருவதாக அவர் கூறினார்.

ஏர் ஏசியாவின் நிதி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து, எதிர்காலத்தில் மாற்று நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், மக்களின் நலனுக்கும் உள்நாட்டு விமானச் சேவைகள் தொடர்ந்து செயல்படுவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

அவ்வாறு அரசாங்கம் நிதியுதவி வழங்கும் பட்சத்தில், ஏற்கெனவே ஏர் ஏசியாவுக்குக் கடன் வழங்கியவர்களைவிட அரசாங்கத்தின் நிதி உரிமைகளுக்கு முன்னுரிமை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அமிர் ஹம்சா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here