கோலாலம்பூர்,
சிக்கலுக்குள்ளான மற்றும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை மீட்டெடுக்கும் மேம்பாட்டாளர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 100 விழுக்காடு முத்திரை வரி விலக்கு வழங்கப்படும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் அறிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட சொத்து உரிமை மாற்ற ஆவணங்களுக்கும் கடன் ஒப்பந்தங்களுக்கும் இந்த முத்திரை வரி விலக்கு பொருந்தும்.
2027 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகையானது, சிக்கலுக்குள்ளான வீடமைப்புத் திட்டங்களை மீட்டெடுக்க அதிகமான மேம்பாட்டாளர்களையும் குத்தகையாளர்களையும் ஊக்குவிப்பதோடு, அசல் வீடு வாங்குவோரின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
தங்களது கனவு இல்லங்களுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நலனைப் பாதுகாப்பதிலும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குத் தீர்வு காண்பதிலும் மடானி அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை இந்நடவடிக்கை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
1,726 வீடமைப்புத் திட்டங்களுக்குத் தீர்வு
2026 ஆகஸ்டு மாதம் வரையில் சிக்கலுக்குள்ளான மற்றும் கைவிடப்பட்ட 1,726 வீடமைப்புத் திட்டங்களை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு (KPKT) வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது அல்லது அவற்றுக்குத் தீர்வு கண்டுள்ளது.
இதன் மூலம் ஏறக்குறைய இரண்டு லட்சம் வீடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டு மதிப்பு 15,816 கோடி ரிங்கிட் ஆகும்.
2030ஆம் ஆண்டுக்குள் சிக்கலுக்குள்ளான வீடமைப்புத் திட்டங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே அமைச்சின் இலக்காகும். இத்திட்டங்களைப் பூர்த்தி செய்யத் தகுதியான மேம்பாட்டாளர்களும் குத்தகையாளர்களும் முன்வருவதற்கு இந்த முத்திரை வரி விலக்கு கூடுதல் ஊக்குவிப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
மலேசிய சொத்து, வீடமைப்பு மேம்பாட்டாளர் சங்கத்தின் (REHDA) 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்திர விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு உதவி
2027 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வீடமைப்புக் கடன் உத்தரவாதத் திட்டத்திற்கு (SJKP) 2,000 கோடி ரிங்கிட் வரையிலான நிதி உத்தரவாதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுயதொழில் புரிவோர், கிக் பொருளாதாரத் துறையில் பணிபுரிவோர் உட்பட முதல் முறையாக வீடு வாங்கும் சுமார் 80,000 பேர் பயனடைவார்கள்.
மேலும், 2027 ஜனவரி 1 முதல் 2030 டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் விற்பனை, கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் தகுதியுடைய முதல் முறை வீடு வாங்குவோருக்கான முத்திரை வரி விலக்குச் சலுகையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வலுவான நிலையில் சொத்துத் துறை
2026ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் சொத்துத் துறை 6,031 கோடி ரிங்கிட் மதிப்பிலான 108,990 பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2026–2035 தேசிய வீடமைப்புக் கொள்கையின் கீழ் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதோடு, தற்போதைய அடுக்குமாடிச் சொத்து நிர்வாகச் சட்டத்தை மறுஆய்வு செய்வதன் மூலம் நாட்டின் வீடமைப்புத் துறை மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வர்த்தக லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், தரமான வீடுகளை மக்களுக்கு வழங்குவதில் மேம்பாட்டாளர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் ஙா கோர் மிங் கேட்டுக்கொண்டார்.
நகர்ப்புற வெள்ளம், அதிகரித்து வரும் வெப்பநிலை, முதியோரின் தேவைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த, பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமூக வீடமைப்புத் திட்டங்களில் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்துதல், மழைநீரை உறிஞ்சும் பல்நோக்குப் பூங்காக்களை உருவாக்குதல், கழிவில்லா மாவட்டங்களை ஏற்படுத்துதல், நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.























