நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அரண்மனையின் முடிவுக்காகக் காத்திருக்கும் தேசிய முன்னணி!

கோலாலம்பூர், 

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிகள் தொடர்பான முடிவை மாநில அரண்மனை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை தேசிய முன்னணியின் முக்கியத் தலைவர்கள் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இச்சந்திப்பின்போது இணக்கம் எட்டப்பட்டதாகத் தெரிவித்த துணைப் பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, இறுதி முடிவு மாநில ஆட்சியாளரின் கைகளிலேயே இருப்பதாகக் கூறினார்.

“துவாங்குவுடனான சந்திப்பு அமைதியான சூழலில் நடைபெற்றது. நாங்கள் இணக்கம் கண்ட விவகாரம் தொடர்பான இறுதி முடிவை அரண்மனை அறிக்கை மூலம் அறிவிக்கட்டும்,” என்று இஸ்தானா ஹிங்காப்பிற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அம்னோ துணைத் தலைவரும் நெகிரி செம்பிலான் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் ஹசான், தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதிர், பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸலினா ஒத்மான் சைட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மாநில ஆட்சியாளரைச் சந்தித்துப் பேசினார்.

கடந்த நவம்பர் 16ஆம் தேதி இஸ்மாயில் லாசிம் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகியதாக ஸம்ரி அறிவித்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் அரசியல் சர்ச்சை ஏற்பட்டது.

எனினும், மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆட்சியாளர் பதவி விலகலை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது அமலுக்கு வரும் என்றும், இஸ்மாயில் தொடர்ந்து மந்திரி பெசாராகப் பதவி வகிப்பதாகவும் மறுநாள் அரண்மனை தெளிவுபடுத்தியது.

இதனிடையே, தாம் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் அதனைச் சமர்ப்பிக்க ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கடந்த நவம்பர் 20ஆம் தேதி இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.

மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு தமக்கு இருப்பதை இஸ்மாயில் நிரூபிக்க வேண்டும் என்பதுடன், புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியலையும் ஆட்சியாளரின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அரண்மனை தெரிவித்துள்ளது.

இவ்விரு விவகாரங்களுக்கும் தீர்வு காணப்பட்ட பின்னரே அடுத்த மாநில சட்டமன்றக் கூட்டத்திற்கான தேதியும் 2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் தேதியும் நிர்ணயிக்கப்படும்.

கடந்த செப்டம்பர் மாதம் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேரின் நியமனங்களை ஆட்சியாளர் ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இல்லாமல் மாநில நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த 24 சட்டமன்ற உறுப்பினர்களும் இஸ்மாயிலின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக முன்னதாகச் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அரண்மனையின் அடுத்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here