கோலாலம்பூர்,
பொது இடங்களில் கைவிடப்பட்ட வாகனங்களை விரைந்து அகற்றுவது, பேரங்காடிகளில் மறுசுழற்சி வசதிகளை விரிவுபடுத்துவது, முதியோர் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது ஆகிய மூன்று முக்கிய முடிவுகளுக்கு 88ஆவது தேசிய ஊராட்சித்துறை மன்றக் (MNKT) கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு துணைப் பிரதமரும் எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தலைமையேற்றார்.
வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங், மந்திரி பெசார்கள், சம்பந்தப்பட்ட கூட்டரசு அமைச்சர்கள் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டரசு அரசியலமைப்பின் 95A பிரிவின் கீழ் கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான கொள்கைகளை வகுக்கும் அதிகாரப்பூர்வ தளமாக தேசிய ஊராட்சித்துறை மன்றம் விளங்குகிறது.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உடனடியாக அமல்படுத்துமாறு ஊராட்சி மன்றங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் மொத்தம் ஏழு ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் நான்கு முக்கிய வழிகாட்டுதல்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கைவிடப்பட்ட வாகனங்களை அகற்ற புதிய நடைமுறை
பொது இடங்களில் கைவிடப்பட்ட வாகனங்களை விரைவாக அகற்றுவதற்கு ஊராட்சி மன்றங்களுக்கு மூன்று வழிமுறைகளை வழங்கும் வகையில் தற்போதைய வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய நடைமுறை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமல்படுத்தப்படும்.
பேரங்காடிகளில் மறுசுழற்சி வசதி கட்டாயமாக்கப்படும்
பேரங்காடிகளில் மறுசுழற்சி வசதிகளை ஏற்படுத்துவது, அவற்றின் வணிக வளாக உரிமத்திற்கான நிபந்தனையாகக் கட்டங்கட்டமாக அமல்படுத்தப்படும்.
2030ஆம் ஆண்டுக்குள் திடக்கழிவுகளில் 48 விழுக்காடு குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படுவதைத் தவிர்க்கும் அரசாங்கத்தின் இலக்கிற்கு இந்நடவடிக்கை துணைபுரியும்.
முதியோர் பராமரிப்பு மையங்களை அமைக்க எளிய நடைமுறை
2035ஆம் ஆண்டுக்குள் மலேசியா முதியோர் அதிகம் வாழும் நாடாக உருவெடுக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு, முதியோர் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படவுள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான புதிய முதியோர் சார்ந்த கட்டமைப்புத் திட்டமிடல் வழிகாட்டுதலின் கீழ், தற்போதுள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வர்த்தக வளாகங்களை முதியோர் பராமரிப்பு மையங்களாக மாற்றிப் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நகரங்களுடன் இரட்டை நகர ஒத்துழைப்பு
வெளிநாட்டு நகரங்களுடன் இரட்டை நகர ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கும் கடுமையான நிபந்தனைகளுடன் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பாகச் செயல்படும் ஊராட்சி மன்றங்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுவதுடன், மக்களுக்கு நேரடிப் பயனளிக்கும் துறைகளில் மட்டுமே இத்தகைய ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும்.
மேலும், வெளிப்புற விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்குவதில் பொதுப்பணி அமைச்சுக்கும் ஊராட்சி மன்றங்களுக்கும் இடையிலான அதிகார வரம்புகளைத் தெளிவுபடுத்தும் வழிகாட்டுதல் திருத்தங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு அமலாக்கத்தை வலுப்படுத்தும் வகையில் 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகளின் செயல்பாட்டு வரம்பை விரிவுபடுத்துவது மற்றும் 1960ஆம் ஆண்டு நிலச் சட்டத்தில் (சட்டம் 530) முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
பருவமழைக் காலத்தில் வடிகால்களின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும்
இதனிடையே, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கால்வாய்களும் வடிகால்களும் எப்போதும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய, 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களை விரைவுபடுத்துமாறு துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப் ஊராட்சி மன்றங்களைக் கேட்டுக்கொண்டார்.
அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கும்போது வெள்ளத் தடுப்புப் பெருந்திட்டத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய மாநில அரசாங்கங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்களுடனான ஒத்துழைப்பை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் (KPKT) வாயிலாக மடானி அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும் என அமைச்சு தெரிவித்துள்ளது.






















