கோலாலம்பூர்:
பல்வேறு நிர்வாகக் குழப்பங்களுக்குப் பிறகு, நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவையொட்டி கோல பிலாவிலுள்ள இஸ்தானா ஸ்ரீ மெனாந்தி அரண்மனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காலை 10 மணியளவில் தொடங்கிய இவ்விழா, நெகிரி செம்பிலான் மாமன்னர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வைச் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் அரண்மனை வளாகத்திற்குள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும், அரண்மனையின் 2-ஆவது நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், விழாவிற்கு அனுமதிக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களைச் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
இன்று காலை பதவியேற்கவுள்ள புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன், மாநில முதலமைச்சர் டத்தோ இஸ்மாயில் லாசிம் காலையிலேயே அரண்மனைக்கு வந்ததை காணமுடிந்தது.
மாநில நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் முதலமைச்சருக்குத் துணை நிற்கும் ஆட்சிக்குழுவினரின் புதிய பொறுப்புக்காலத்தின் தொடக்கமாக இப்பதவியேற்பு விழா அமைந்துள்ளது.























