முறையற்ற செயல்களில் ஈடுபட்ட விமானப் படைவீரர்கள் தொடர்ந்து பணியில் இருக்கலாமா என்பது குறித்து ஆயுதப்படைகள் மதிப்பீடு செய்யும். குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லாத நபர்களும் இதில் அடங்குவர் என்று தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார். இத்தகைய நபர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க, ராணுவத்தின் உள்ளக விசாரணைகள் மூலம் மதிப்பீடு செய்யப்படலாம் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலேசிய அரச விமானப்படைக்கு (RMAF) சொந்தமான விமானத்தை போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் காவல் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், இந்த நடைமுறை மேற்கொள்ளப்படலாம். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டாலோ அல்லது தொடர்ந்து காவலில் வைக்கப்படாமல் இருந்தாலோ, அவர்களின் தற்போதைய நிலை குறித்து ராணுவம் உள்ளக விசாரணையை நடத்தக்கூடும்.
ராணுவத்தினர் ஈடுபடும் எந்தவொரு முறையற்ற செயலையும் அமைச்சகம் தீவிரமாகக் கருதுவதாகக் கூறிய காலித், இத்தகைய செயல்கள் ஆயுதப்படைகளின் பிம்பத்தைக் கெடுப்பதுடன், நாட்டின் தற்காப்பு முயற்சிகளையும் பலவீனப்படுத்தும் என்று தெரிவித்தார்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போதுள்ள அனைத்து நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும் (SOP) மறுஆய்வு செய்ய மலேசிய அரச விமானப்படை ஒரு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளதாக அவர் கூறினார்.
இதுவரை, ஆறு அதிகாரிகள், இரண்டு கீழ்நிலை வீரர்கள் உட்பட மொத்தம் எட்டு ராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு நபருடனும் அமைச்சகம் சமரசம் செய்துகொள்ளாது என்றும், சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்கும் என்றும் காலிட் தெரிவித்தார். யாரையும் பாதுகாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அதனால்தான் அவர்களைக் கைது செய்து, விசாரணைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைத்தோம். இந்த விவகாரத்தில் இறுதிவரை நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரியைக் காவல்துறை கைது செய்யும் என்று நம்புகிறோம். ஏனெனில், கைது செய்யப்பட்ட ராணுவத்தினர் இந்த கும்பலால் வெறும் கருவிகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று, மலேசிய அரச விமானப்படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் 96.2 கிலோ மெத்தாம்பேத்தமைன் கடத்தியதாக கைது செய்யப்பட்ட வேளையில் அமீருல் ஃபைசல் ரோஸ்டின், அமீர் ஆரிஃபுதீன் அமினுல்லா, அரீஃப் ஃபௌஸான் அலி, டான் சுய் செங், நூர் ஹனிஸ் சியாபிகா அமீன், அபிஃபா அம்தாஸ் ஆகிய மூவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.















