பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கை போக்குவரத்து அமைச்சராக மீண்டும் தனது பணிகளை விரைவில் தொடருமாறு வலியுறுத்தியுள்ளார். சிரம்பான் பரோய் பகுதியில் இன்று நடைபெற்ற ‘யாகின் மடானி 2026’ (Yakin Madani 2026) நிகழ்வில் உரையாற்றும்போது அன்வார் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அந்தோணி லோக் தற்போது விடுப்பில் இருந்தாலும், போக்குவரத்து அமைச்சகம் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததால், அவர் இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக அன்வார் தெரிவித்தார். அவருக்குச் சிந்திக்க நான் அவகாசம் அளித்தேன் என்று கூறிய அன்வார், போக்குவரத்து அமைச்சகம் அரசாங்கத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான அமைச்சகங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது வான்வழி, கடல்வழி, சாலை, நெடுஞ்சாலை இணைப்புகள் மூலம் மக்களை ஒன்றிணைக்கிறது என்று குறிப்பிட்டார்.
அவரது செயல்பாடு சிறப்பாகவும் பாராட்டுக்குரியதாகவும் இருந்தது. அதனால்தான், பிரதமராக, அவரது ராஜினாமாவை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது காரணங்களை நான் மதிக்கிறேன், என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டிய நமது கடமையை விட எந்தக் காரணமும் பெரியதல்ல
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்கலாம் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 10 அன்று அந்தோணி லோக்கை தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அன்வார் அவரிடம் வலியுறுத்தி வருகிறார். பிரதமர் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போதைக்கு விடுப்பில் இருக்குமாறே அவரிடம் கேட்டுக்கொண்டார். இருப்பினும், அந்தோணி லோக் தனது முடிவில் உறுதியாகவே இருந்து வருகிறார்.















