கோலாலம்பூர்,
வழக்கமான வர்த்தக நடவடிக்கைகளின்போது வெளியிடப்படும் கொள்முதல் ஆணைகள் (Purchase Orders) மற்றும் விலைப்புள்ளிகளுக்கு (Quotations) முத்திரை வரி விதிக்கப்படாது என உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்எச்டிஎன்) அறிவித்துள்ளது.
இத்தகைய ஆவணங்களை முத்திரையிடுவதற்காகவோ அங்கீகாரம் பெறுவதற்காகவோ உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.
இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதுடன், இவ்வறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைகள் மற்றும் விலைப்புள்ளிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓர் ஆவணத்திற்கு முத்திரை வரி விதிக்கப்படுவது அதன் பெயர் அல்லது தலைப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, அதன் உள்ளடக்கம் மற்றும் சட்டப்பூர்வ விளைவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று எல்எச்டிஎன் விளக்கமளித்துள்ளது.
வர்த்தகத் தரப்பினரிடையே நிலவும் குழப்பங்களைக் களைவதோடு, வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்கவும், முத்திரை வரி சுயமதிப்பீட்டு முறைக்கு (Stamp Duty Self-Assessment System) சுமுகமாக மாறுவதை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, வழக்கமான கொள்முதல் ஆணைகள் மற்றும் விலைப்புள்ளிகளுக்கு முத்திரை வரி விதிக்கும் புதிய வரி விளக்கத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் நிதியமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் இன்று காலை வலியுறுத்தியிருந்தார்.
புதிய வரி விளக்கத்தின்படி, மொத்தப் பரிவர்த்தனை மதிப்பில் 0.5 விழுக்காடு முத்திரை வரியாக விதிக்கப்படும் என்றும், குறைந்தபட்ச கட்டணம் ரிம10 ஆக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உதாரணமாக, ரிம5 மில்லியன் மதிப்பிலான கொள்முதல் ஆணைக்கு ரிம25,000 முத்திரை வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இது வர்த்தகர்களுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனிடையே, முத்திரை வரி தொடர்பில் விளக்கம் தேவைப்படும் வரி செலுத்துவோர் 03-8911 1000 என்ற எண்ணின் வாயிலாக ஹாசில் தொடர்பு மையத்தை அணுகலாம் என எல்எச்டிஎன் தெரிவித்துள்ளது.






















