ஜார்ஜ் டவுன்,
போதைப்பொருட்களைக் கடத்துவதற்கு ராணுவச் சொத்துகளைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத நாட்டுத் துரோகச் செயல் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடினார்.
உள்நாட்டு, வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்து, நாட்டின் தற்காப்பு வசதிகளைக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“நான் விமானப்படை வீரர்களுக்கு எதிரானவன் அல்ல. விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களைப் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தி நாட்டுக்குத் துரோகம் செய்பவர்களே எனது எதிரிகள்,” என்று இன்று நடைபெற்ற Semarak Wakaf Perdana 2026 நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.
சமூகத்தில் ஊழல் ஆழமாக வேரூன்றியிருப்பதன் காரணமாகவே குற்றவாளிகள் நிர்வாகக் கட்டமைப்பிலுள்ள பலவீனங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக அன்வார் குறிப்பிட்டார்.
முன்னதாக, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சபா, லாபுவானிலுள்ள இரண்டு அரச மலேசிய விமானப்படைத் தளங்கள் வழியாக ரிம156 மில்லியன் மதிப்பிலான மூன்று டன் மெத்தம்பெத்தமின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்திருந்தார். போலீசாரின் உளவுத்துறை நடவடிக்கைகளின் மூலம் 21 போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனிடையே, 90 கிலோகிராமுக்கும் அதிகமான மெத்தம்பெத்தமின் போதைப்பொருளைக் கடத்தியதாக மூன்று விமானப்படை அதிகாரிகள் உட்பட அறுவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.























