சாலை விபத்தில் கடந்த நவம்பர் 24ஆம் தேதிஉயிரிழந்த குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஆர். திலக் (வயது 38) குடும்பத்திற்கு, அரசாங்கம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) வலியுறுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியானது, வருமான இழப்பையும் அவர்களின் நீண்டகாலத் தேவைகளையும் கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும் என்று எம்எம்ஏ தலைவர் டாக்டர் எல். சிவனேசன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிதி உதவியானது, அக்குடும்பத்திற்குச் சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய இதர சலுகைகளுக்கு மேலானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நமது சுகாதாரப் பணியாளர்களைப் பராமரிக்கும் பொறுப்பு, மருத்துவமனைகளின் எல்லைகளையும் தாண்டிச் செல்ல வேண்டும். நாட்டிற்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கும் பணியாளர்கள், தாங்கள் பணியின் போது உயிரிழக்கும் பட்சத்தில், தங்கள் குடும்பங்களை இந்த நாடு கவனித்துக்கொள்ளும் என்ற உறுதியைப் பெறத் தகுதியானவர்கள்.

டாக்டர் திலக், தைப்பிங் மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஆறு ஒராங் அஸ்லி கிராம மக்கள் பயணித்த வேன் ஒன்றின் மீது மோதியது. அந்த கிராம மக்களும் மருத்துவ சிகிச்சைக்காகவே அவர் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தனர். விபத்துக்குப் பிறகு அவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 38. சுகாதாரப் பணியாளர்களின் பயணப் பாதுகாப்பு குறித்து விரிவான மறுஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சகத்திடம் டாக்டர் சிவனேசன் கேட்டுக்கொண்டார். இதில் பணி அட்டவணை நடைமுறைகள், மருத்துவமனைகளில் ஓய்வு வசதிகள், பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகள் போன்ற அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.















