ஜார்ஜ் டவுன்: 16ஆவது பினாங்கு மாநிலத் தேர்தலை, அடுத்த பொதுத் தேர்தலுடன் (GE16) ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஜனநாயக செயல் கட்சியின் (DAP) மத்திய செயற்குழு விவாதிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார். பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் 16ஆவது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறக்கூடும் என்று கூறியதை அடுத்து இது குறித்த தீர்மானம் ஒன்றை இன்றைய பினாங்கு ஜசெக மாநாட்டில் முன்மொழிந்து அங்கீகாரம் பெற விரும்புவதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
தேர்தல்களின் போது வாக்காளர்களின் வருகை அதிகமாக இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். தேர்தல்களைத் தனித்தனியாக நடத்தினால், (மாநிலத் தேர்தலில்) வாக்காளர்களின் வருகை குறைவாக இருப்பதற்கான அபாயம் உள்ளது. இது 2023இல் நடைபெற்ற ஆறு மாநிலத் தேர்தல்களில் மட்டுமல்லாமல், சமீபத்தில் ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அங்கு பதிவான வாக்கு சதவீதம், கடந்த பொதுத் தேர்தலை விட குறைவாகவே இருந்தது. எனவே, தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதே சிறந்த தேர்வாகும் என்று பினாங்கு ஜசெக மாநாட்டின் ஒரு பகுதியாக செய்தியாளர்களிடம் லோக் கூறினார்.
முன்னதாக தனது உரையில், ஜசெக தலைமையிலான மாநில அரசு பினாங்கினை தொடர்ந்து முன்னேற்றத்தையும் செழிப்பையும் நோக்கி அழைத்துச் செல்லும் என்பதை பினாங்கு மக்களிடம் எடுத்துக்கூறி, அவர்களை நம்ப வைக்குமாறு பினாங்கு ஜசெக பிரதிநிதிகளை லோக் கேட்டுக்கொண்டார். இதுவே நமது பணியும் கடமையுமாகும். கடந்த 18 ஆண்டுகால நமது தலைமைத்துவம் பினாங்கு மாநிலத்திற்குப் பல நன்மைகளை வழங்கியுள்ளது என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பினாங்கு மாநிலத்தை ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல, மக்கள் தொடர்ந்து எங்களுக்குத் தங்கள் ஆணையை வழங்குவார்கள் என்று நம்புகிறோம். இதன் மூலம், தற்போது நடைபெற்று வரும் அனைத்துத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை உறுதி செய்ய முடியும் என்று அவர் கூறினார்.















