அம்பாங்:
அம்பாங் நியூ டவுனில் வீடுடைத்து, வாகனம் திருடிய வழக்கில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒப்பந்ததாரராக பணிபுரியும் 28 வயதான பாதிக்கப்பட்டவர், வீட்டின் முன் கதவு மற்றும் இரும்புக் கதவு திறந்திருப்பதைக் கண்டதாகவும், அவர் வீட்டுக்குள் சென்று சோதனை செய்ததில், முக்கிய ஆவணங்கள், பணம் மற்றும் புரோத்தோன் சாகா கார் சாவிகள் அடங்கிய தனது பணப்பையை அறையின் மேஜையில் காணவில்லை என்றும், பின்னர் பார்க்கிங் பகுதியை சோதனை செய்ததில், புரோத்தோன் சாகா கார் திருடப்பட்டதைக் கண்டதாகவும் கடந்த திங்கட்கிழமை (15/01/2024) அன்று சுமார் 0730 மணி அளவில் புகார் அளித்தார் என்று, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் கூறினார்.
அதனை தொடர்ந்து அம்பாங் ஜெயா மாவட்ட போலீசார் மேற்கொண்ட சோதனையில், 16/01/2024 அன்று 29 வயது வேலையில்லாத உள்ளூர் நபரை, பண்டார் பாரு, அம்பாங்கில் வைத்து கைது செய்தனர்.

அவரிடமிருந்து புரோத்தோன் சாகா கார், கார் சாவி உட்பட பல்வேறு வகையான சாவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பையை போலீசார் பறிமுதல் செய்தனர் என்றார்.
சந்தேக நபரின் சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் அவர் “போதைப்பொருள்” பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேக நபருக்கு முந்தைய 15 குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
சந்தேகநபரின் விளக்கமறியல் விண்ணப்பம் இன்று 17/01/2024 அம்பாங் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்படும் என்றார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 457-ன் கீழ் திருடும் நோக்கத்திற்காக வீடுகளை உடைத்தல் மற்றும் வாகன திருட்டு தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவு 379A ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.






















