வெகுஜன ஊடகங்களில் அடிக்கடி எச்சரிக்கப்பட்ட போதிலும், தொலைபேசி மோசடி கும்பல் மூலம் ஏமாற்றப்பட்ட ரொம்பினில் ஒரு ஆசிரியர் 135,150 ரிங்கிட்டை இழந்தார். ஜூலை 2 ஆம் தேதி டிஜிட்டல் தகவல் தொடர்புத் துறையின் நெட்வொர்க் பிளாக்கிங் பிரிவைச் சேர்ந்த அதிகாரி என்று கூறிக்கொள்ளும் நபரிடமிருந்து 25 வயதான பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக பகாங் காவல்துறைத் தலைவர் யஹாயா ஓத்மான் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
பேராக்கில் தனது ஃபோன் லைனை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அவர் ஒரு குற்றத்தைச் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறப்பட்டதாக அவர் கூறினார். பின்னர் அந்த தொலைபேசி அழைப்பு ஒரு போலீஸ் அதிகாரியாகக் காட்டிக்கொண்ட ஒரு நபருடன் இணைக்கப்பட்டது. பின்னர் அவர் விசாரணையின் நோக்கத்திற்காகவும் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்க்கவும் பணத்தை மாற்றுமாறு பாதிக்கப்பட்டவரை வற்புறுத்தினார்.
பாதிக்கப்பட்டவர் 128,000 ரிங்கிட்டிற்க்கு தனிநபர் கடனைப் பெற்று தனது சேமிப்பைப் பயன்படுத்தி ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 11 பரிவர்த்தனைகளைச் செய்தார். இதன் விளைவாக 135,150 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக யாஹாயா கூறினார். பாதிக்கப்பட்ட பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்று ரொம்பின் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் புகார் அளித்ததாக யாஹாயா கூறினார்.
மோசடி செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை காவல்துறை அல்லது அரசு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு மோசடிக்கு ஆளாகாமல் இருக்கவும் அவர் அறிவுறுத்தினார்.













