கோலாலம்பூர்:
2024 அரையாண்டு வரையில் பிகேஎஸ் ஒருங்கிணைந்த திட்ட நடவடிக்கையில் 15.06 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக மைக்ரோ – சிறு, நடுத்தர தொழில்முனைவோர் மேம்பாடு சார்ந்த 286 திட்டங்களும் முன்னெடுப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு செயல் பாடுகள் 10.8 விழுக்காடு அதிகரித் துள்ளது என நேற்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி தலைமையேற்ற 2024ஆம் ஆண்டுக்கான 3ஆவது தேசிய தொழில்முனைவோர், பிகேஎம்எஸ் மேம்பாட்டு மன்றச் செயலகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 32.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 40 திட்டங்கள் குறித்தும் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. எனவே அமைச்சு, இலாகாக்கள், மாநில அரசுகள் ரீதியில் தொழில்முனைவோர், பிகேஎம்எஸ் மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்துக்குமான அடைவு நிலை தரவு பதிவை கட்டாயமாக்க செயலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதிலும் கூட்டம் நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு வார கால அவகாசத்திற்குள் இந்தத் தரவுகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் அரசாங்க வளங்களை வீணடிக்கும் நடவடிக்கைகளைக் குறைப்பதோடு அமைப்புகள் இடையிலான நடவடிக்கைகளுக்கு இடையே முரண் ஏற்படுவதையும் குறைப்பதற்கு முழுமையான தரவு பதிவு அவசியம் என்று துணைப்பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் 5.02 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டின் வழி தொழில்முனைவோர் மேம்பாட்டு, கூட்டுறவுக்கழகத்துறை அமைச்சு 89 செயல்பாடுகள் அல்லது திட்டங்களைப் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக 2030 பிகேஎம்எஸ் வியூகத் திட்டத்தின் கீழ் அமலாக்கச் செயல்பாடுகள் தொடர்ந்து தரம் உயர்த்தப்படும் என்று கூட்டத்தில் பங்குபெற்ற அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய எஸ்எம்இ கார்ப் தலைமைச் செயல் அதிகாரி ரிஸால் டத்தோ நைனி, செயலகத்தின் முடிவுக்கு ஏற்ப எஸ்எம்இ கார்ப் மலேசியா இந்தத் தரவுப் பதிவுகளை மேம்படுத்தும் இந்த முயற்சியை வலுப்படுத்தும் என்று உறுதி அளித் தார். எஸ்எம்இ கார்ப் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு – கூட்டுறவுக்கழகத்துறை துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.















