குளுவாங்:
குளுவாங்கிலுள்ள சன்ரைஸ் பார்க், தாமான் லக்சமானாவில் நேற்று வெள்ளிக்கிழமை (நவ.15) மாலை நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் இறந்து கிடந்தார்.
குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மற்றொரு சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதாகவும் குளுவாங் காவல்துறை தலைவர், துணை ஆணையர் நிக் முஹமட் அஸ்மி ஹுசைன் கூறினார்.
நேற்றிரவு 7.12 மணியளவில் உள்ளூர் நபர் ஒருவர் வீடுடைப்பு குறித்து அதிகாரிகளுக்கு எச்சரித்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு அதிகாரிகள் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“அதன்பேரில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இறந்து கிடந்தார்.
இறந்தவரின் வலது கையில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது, அக்காயம்ஒ ருவேளை வீடு உடைக்கும் போது அல்லது தப்பிக்கும் முயற்சியின்போது இரும்பு வேலி அல்லது வேறு பொருளால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனால் பெரிய இரத்த நாளம் அறுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் நம்புவதாக, இன்று சனிக்கிழமை (நவம்பர் 16) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் சொன்னார்.
அதேநேரம் 39 வயதுடைய முஹமட் சாலி தலிப் என அடையாளம் காணப்பட்ட நான்காவது சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவரின் கடைசியாக அறியப்பட்ட முகவரி கம்போங் பெலுகர் குனோங், பச்சோக், கிளந்தான் என்றும், அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்றும் அவர் மேலும் கூறினார்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 29 மற்றும் 48 வயதிற்குட்பட்ட நான்கு சந்தேக நபர்களும் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கும் மெத்தம்பேட்டமைன் பாவித்திருப்பது கண்டறியப்பட்டது என்றும், வீடு உடைத்து கொள்ளைக்காக குற்றவியல் சட்டம் பிரிவு 457 கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.









