ஜோகூர் பாரு நகராண்மைக்கழக (MBJB) இழுவை லோரிக்கு தீ வைத்ததற்காக வேலையில்லாத ஒருவருக்கு ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றம் இன்று ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 6,000 ரிங்கிட் அபராதமும் விதித்தது. 31 வயதான வான் நஸ்ருல் வான் அகமது அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.07 மணிக்கு MBJB வாகன கிடங்கில் இந்த குற்றம் நடந்ததால் 24,000 ரிங்கிட் சேதம் ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளில் வான் நஸ்ருல் பெட்ரோல் ஊற்றி லோரியின் பின்புறத்தில் தீ வைப்பது பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை- அபராதம் விதிக்கக்கூடிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 435 இன் கீழ் தீ வைத்து எரித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அவரது கார் இழுத்துச் செல்லப்பட்ட பிறகு இந்த சம்பவம் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அபராதம் 500 ரிங்கிட்டிலிருந்து 250ஆகக் குறைக்குமாறு மேல்முறையீடு செய்ததாகவும், ஆனால் அதை இன்னும் செலுத்த முடியவில்லை என்றும் நஸ்ருல் கூறினார்.
ஆமாம், நான் அதை எரித்தேன். என் கார் இழுத்துச் செல்லப்பட்டதால் நான் கோபமடைந்தேன். 200 ரிங்கிட் கூட, என்னால் செலுத்த முடியவில்லை. என் காரைத் திரும்பப் பெற விரும்பினேன். எனக்கு ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் வீட்டுக் கொடுப்பனவுகள் உள்ளன. எனக்கு திருமணமாகவில்லை. வேலையைத் தொடங்க முயற்சிக்கிறேன் என்று அவர் தனது இலகுவான தண்டனைக்கான மேல்முறையீட்டில் கூறினார்.
துணை அரசு வழக்கறிஞர் சிதி பாத்திமா மாமு, இந்தச் செயல் கடுமையானது என்றும் அது உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறினார். அபராத்தைக் குறைப்பதில் MBJB ஏற்கெனவே கருணை காட்டியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் தீ வைப்பில் ஈடுபட்டார். பொது நலனுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நாங்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார். பிரதிநிதித்துவம் பெறாத வான் நஸ்ருல், இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு மீண்டும் வாசிக்கப்பட்டபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.









