மீண்டும் களமிறங்கியது ‘Friendster: புதிய பொலிவுடன் பழைய நினைவுகள்!

கோலாலம்பூர்:

2000-களின் தொடக்கத்தில் சமூக வலைதள உலகின் முன்னோடியாகத் திகழ்ந்த ‘பிரண்ட்ஸ்டர்’ (Friendster), ஒரு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு முற்றிலும் புதிய தோற்றத்துடனும், தனித்துவமான அம்சங்களுடனும் மீண்டும் அறிமுகமாகியுள்ளது.

புதிய ‘பிரண்ட்ஸ்டர்’ தளம் தற்போது iOS செயலியில் மட்டுமே கிடைக்கிறது. இது மற்ற சமூக வலைதளங்களைப் போலன்றி, நிஜ வாழ்க்கையில் பழகும் நண்பர்களுடன் மட்டுமே இணைவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.

ஒருவர் மற்றொருவரை நண்பராகச் சேர்க்க வேண்டுமெனில், இருவரும் நேரில் சந்தித்து தங்கள் கைபேசிகளை ஒன்றோடொன்று தட்ட (Tap) வேண்டும். இதன் மூலம் ‘உண்மையான நண்பர்கள்’ மட்டுமே இணைப்பில் இருப்பதை இந்தச் செயலி உறுதி செய்கிறது.

பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்தச் செயலியில் விளம்பரங்கள், தேவையற்ற ஸ்பேம்கள் (Spam) மற்றும் பயனர்களைக் கட்டுப்படுத்தும் அல்காரிதம்கள் (Algorithms) எதுவும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரண்ட்ஸ்டரை உருவாக்கிய மைக் கார்சன் (Mike Carson), இது குறித்துத் தனது வலைப்பதிவில் கூறியதாவது: “இன்றைய சமூக வலைதளங்கள் எதிர்மறை எண்ணங்களையே அதிகம் பரப்புகின்றன. ஆனால், பழைய பிரண்ட்ஸ்டர் ஒரு நேர்மறையான அனுபவமாக இருந்தது. மீண்டும் மக்கள் நேரில் சந்திப்பதைத் தூண்டும் வகையில், கைபேசிகளைத் தட்டி இணைக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது நீங்கள் உண்மையில் விரும்பும் நபர்களுடன் மட்டும் தொடர்பு கொள்ள உதவும் என்றார்”

ஒருவருடன் நண்பராகி ஒரு முழு ஆண்டு முடிந்தும், இருவரும் நேரில் சந்தித்துக் கைபேசிகளைத் தட்டவில்லை எனில், அது குறித்துச் செயலி நினைவுபடுத்தும் (Nudge). மேலும் பழைய பிரண்ட்ஸ்டரைப் போலன்றி, இது மிகவும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றப்பட்டுள்ளது.

2002-இல் தொடங்கப்பட்ட பிரண்ட்ஸ்டர், உலகின் முதல் வெற்றிகரமான சமூக வலைதளங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. பின்னர் மற்ற தளங்களின் வருகையால் இதன் மவுசு குறைந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு தனது சேவையை முழுமையாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here