இத்தாலியன் பொது டென்னிஸ் சினியகோவா, ஆஸ்டபென்கோ, எலா வெற்றி

இத்தாலியன் பொது டென்னிஸ் போட்டியில் கேத்தரினா சினியகோவா, ஜெலினா ஆஸ்டபென்கோ, அலெக்ஸாண்ட்ரா எலா உள்ளிட்டோர் 2ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர். மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா 6-2, 6-3 என பிரான்ஸின் லாய்ஸ் பாய்சனை வெளியேற்ற, ஜெர்மனியின் டாட்ஜனா மரியா 6-0, 6-3 என, போலந்தின் மெக்தா லினெட்டை தோற்கடித்தார்.

லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-0, 6-1 என இத்தாலியின் லுக்ரெஸியா ஸ்டெஃபனினியை சாய்க்க, பிலிப்பைன்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா 6-0, 3-6, 6-4 என்ற செட்களில் போலந்தின் மெக்தலினா ஃபிரெச்சை வீழ்த்தினார். கஸகஸ்தானின் யுலியா புடின்சேவா 3-6, 2-6 என செக் குடியரசின் தெரெஸா வாலென்டோவாவிடம் தோல்வியுற்றார்.

கிரீஸின் மரியா சக்காரி 5-7, 6-3, 6-0 என்ற செட்களில், ஆஸ்திரியாவின் லில்லி டேகரை வென்றார். அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் 6-3, 6-2 என இத்தாலியின் நுரியா பிரான்காசியோவை வீழ்த்த, மற்றோர் அமெரிக்கரான பெய்டன் ஸ்டெர்ன்ஸ் 6-4, 6-4 என்ற வகையில் இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென்னை வீழ்த்தினார். ஜெர்மனியின் லாரா சிக்மண்ட் 6-4, 6-4 என செக் குடியரசின் சாரா பெஜ்லெக்கை வெல்ல, பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயா 6-7 (6/8), 4-6 என்ற செட்களில், பிரான்ஸின் லவ்லியா ஜீன்ஜீனிடம் தோல்வியுற்றார்.

 இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், போர்த்துகலின் நுனோ போர்ஜஸ் 6-3, 6-0 என நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை வெல்ல, ஜெர்மனியின் ஜான் லெனார்டு ஸ்ட்ரஃப் 6-2, 6-4 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ கொமிசனாவை வெளியேற்றினார். நெதர்லாந்தின் போடிக் வான் டெ 7-5, 6-3 என பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லரை வீழ்த்த, ஜெர்மனியின் யானிக் ஹன்ஃப்மேன் 6-7 (3/7), 7-6 (7/2), 6-2 என்ற கணக்கில் போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸை தோற்கடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here