கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு? …

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதையடுத்து, தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை கூட்டம் நிறைவடைந்த உடன் முதல்-அமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அனைவரையும் சந்தித்தார். அரசியல் நாகரீகம், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் விஜய் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக நேற்று முதல்-அமைச்சராக பதவியேற்ற விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார். அதில்

(1). இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

(2). பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும். பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும், போதுமான ஆளிநர்கள், பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

(3). தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப்பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும். இவை அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகள் ஆகும்.

இந்நிலையில் கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளநிலையில், 200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here