ஷா ஆலம்: இன்று காலை, இங்குள்ள தஞ்சோங் கரங்கில் உள்ள பாகன் பாசீர் படகுத்துறையில் ஒரு வெளிநாட்டு நபரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கோல சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஸஹருதீன் தாஜுதின், காலை சுமார் 9.45 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து தமக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர் முழு ஆடையுடன் இருந்ததும், அவரது உடல் பாகங்கள் சிதைந்திருந்ததும் கண்டறியப்பட்டது. பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சோங் கரங் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் அஸஹருதின் கூறினார்.
தகவல் தெரிந்த பொதுமக்கள், கோல சிலாங்கூர் மாவட்டக் காவல் தலைமையகத்தின் (IPD) செயல்பாட்டு அறையை 03-32891222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்தையும் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எந்தவொரு குற்றச் செயல்களும் கண்டறியப்படவில்லை என்று இன்று இரவு தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.








