சென்னை, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், “நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வருகிறது. அதுகுறித்து விரைவில் விளக்கம் அளிக்கிறேன்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
பாரதிராஜா மறைவால் தள்ளிவைக்கப்பட்ட அறிவிப்பு
முதலில் ஜூன் 11-ம் தேதி தனது முடிவை அறிவிக்க திட்டமிட்டிருந்த ராகவா லாரன்ஸ், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவை அடுத்து தனது அறிவிப்பை ஒரு நாள் தள்ளிவைத்தார். அதனைத்தொடர்ந்து 12-ம் தேதி, அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.
“நல்ல முடிவு எடுத்துள்ளேன்”
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். அவர் பேசுகையில்,
“நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என யோசித்தேன். நீங்கள் வாருங்கள் என அழைத்தது சந்தோஷம். ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். அதை விரைவில் அறிவிப்பேன். என் ரசிகர்களாகிய உங்களை அழைத்து என் தாயை மேடை ஏற்றி முக்கிய அறிவிப்பை விரைவில் தெரிவிக்க உள்ளேன்” என்றார்.
“விஜய் அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்”
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்து பேசிய அவர்,
“தவெக-வின் ஒரு மாத ஆட்சி சிறப்பாக உள்ளது. அமைச்சர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். மாற்றம் தேவை என்று தான் வாக்களித்து உள்ளீர்கள். சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.









