காரில் ஆபத்தான சாகசம்: 7 வெளிநாட்டவர்கள் போலீசாரால் கைது!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், ஜாலான் சுங்கை பீசி சாலையில் இரண்டு கார்களில் சென்றபடி ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட 7 ஏமன் நாட்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளமான ‘Threads’-இல் பரவியதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப்பிரிவு தலைவர் துணை ஆணையர் முகமட் ஜம்சூரி முகமட் ஈசா இக்கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

ஜாலான் சுங்கை பெசியிலிருந்து ஜாலான் புக்கிட் பிந்தாங் நோக்கிச் சென்ற இரு கார்களின் ஜன்னல்களில் பயணிகள் ஆபத்தான முறையில் வெளியே அமர்ந்தபடியும், உடலை வெளியே நீட்டியபடியும் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 7 நபர்களும் 23 முதல் 26 வயதிற்குட்பட்ட ஏமன் நாட்டு ஆண்கள் என்றும், இவர்களில் 5 பேர் கெடாவில் உள்ள அரசுப் பல்கலைக்கழக மாணவர்களாவர்; மற்ற இருவர் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவர்கள் என்றும், நண்பர் ஒருவரின் திருமணத்தைக் கொண்டாடும் வகையில், வேடிக்கைக்காகவே இந்த சாகசத்தில் ஈடுபட்டதாகப் போலிஸ் விசாரணையில் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்குப் பிறகு போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பிறரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாகச் செயல்படுதல் தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவு 336-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, RM500 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் அல்லது சாட்சியங்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாகத் துன் எச்.எஸ்.லீ போக்குவரத்துப் போலீஸ் நிலையத்திற்கோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here