கோலாலம்பூர்:
பேராக், ஈப்போ அருகிலுள்ள ஜெலாபாங் – அம்பாங் சாலையில் இன்று அதிகாலையில் 12 மோட்டார் சைக்கிள்களும் 3 கார்களும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அவசரத் தகவலின் பேரில், இன்று அதிகாலை 3.35 மணியளவில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கியதாக ஈப்போ மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் முஹமட் நஜீப் ஹம்சா தெரிவித்துள்ளார்.
மேரு பகுதியிலிருந்து தம்பூன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த 15 வாகனங்கள் எதிர்பாராதவிதமாகச் சங்கிலித் தொடர் போல விபத்தில் சிக்கியுள்ளன.
“இந்த விபத்தில் 19 மற்றும் 20 வயதுடைய இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே கொடூரமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற 9 இளைஞர்கள் உடனடியாக ராஜா பெர்மாய்ஸூரி பைனூன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு 19 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.”
இந்தக் கோர விபத்தில் சிக்கிய கார்களின் ஓட்டுநர்கள் எவ்விதக் காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோர விபத்தைக் நேரில் கண்ட சாட்சிகள் அல்லது தகவலறிந்த பொதுமக்கள் உடனடியாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.





















