கோலாலம்பூர்:
கோலாலம்பூர், ஜாலான் கிள்ளான் லாமாவில் வெளிநாட்டிரின் நடன நிகழ்ச்சிகளுடன், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு மையமாகச் செயல்பட்டு வந்த கிளப் ஒன்றை மலேசியக் குடிநுழைவுத் துறை அதிரடியாக முற்றுகையிட்டது.
சனிக்கிழமை (செப்டம்பர் 26) அதிகாலை 12.05 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், 21 முதல் 31 வயதுக்குட்பட்ட சீனாவைச் சேர்ந்த மூவர் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
“பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் ஒரு மாத கால உளவுப் பிரிவின் தீவிரக் கண்காணிப்பிற்குப் பிறகே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட நால்வரிடமும் மலேசியாவில் தங்குவதற்குக் செல்லுபடியாகும் எந்தவொரு பயண ஆவணங்களோ அல்லது நுழைவு இசைவுப் படிவங்களோ (Pass) இல்லை என்பது தெரியவந்துள்ளது” குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் கூறினார்.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனத்தின் (AADK) தலைமையகம் மற்றும் கோலாலம்பூர் கிளையின் கூட்டு ஒத்துழைப்போடு இச்சோதனை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்தப் பொழுதுபோக்கு மையம், Klang Valley பகுதியில் உள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு LGBTQ சமூகத்தினரைக் கவரும் வகையில் வெளிநாட்டினரின் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் மதுபானங்கள் மற்றும் மேஜை முன்பதிவுகளுக்கு ஏற்ப RM53 முதல் RM700 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காகப் புத்ராஜெயா குடிநுழைவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்துக் குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், விசாரணைகளுக்கு உதவ 3 உள்ளூர் ஆண்களுக்குக் குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.















