வாஷிங்டன், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதிக்கு 2 விஷ ஊசிகள் செலுத்தியும் அவரது உயிர் பிரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து, 2026-ல் நிறைவேற்றப்பட இருந்த அனைத்து மரண தண்டனை உத்தரவுகளையும் நிறுத்தி வைக்க டென்னசி மாகாண கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடந்த 1995-ம் ஆண்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் 19 வயதான கொலீன் ஸ்லெம்மர் மற்றும் 18 வயதான கிறிஸ்டா பைக் ஆகிய 2 பெண்களும் பயிற்சியாளர்களாக வேலை செய்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து கிறிஸ்டா பைக், தனது காதலனான 17 வயது டடாரில் ஷிப் என்பவருடன் இணைந்து, கொலீன் ஸ்லெம்மரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் அந்த சமயத்தில் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட கொலீன் ஸ்லெம்மரின் மார்பில், சாத்தான் வழிபாடு தொடர்புடைய குறியீடுகள் செதுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.















