வாரிசான் தலைமைத்துவப் போட்டியில் நடுநிலை வகிக்கப் போகிறேன் – ஷஃபி அப்டால்

கோத்த கினாபாலு: வாரிசான்  கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது ஷஃபி அப்டால், வரவிருக்கும் கட்சித் தலைமைத்துவத் தேர்தலில் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளார். தனக்கு இணையாகக் கட்சியை வழிநடத்த வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர் பிரதிநிதிகளிடமே விட்டுவிட்டார். இந்த வார இறுதியில் சந்தாக்கனில் நடைபெறவுள்ள வாரிசான் கட்சியின் 10ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, ​​கட்சித் தலைமைத்துவத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எந்தவொரு வேட்பாளருக்கும் தான் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்பதை கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் தெளிவாகக் கூறிவிட்டதாக ஷாஃபி தெரிவித்தார்.

இந்த முடிவை பிரதிநிதிகளிடமே விட்டுவிடுவோம்.என்னிடம் ஒரே ஒரு வாக்கு மட்டுமே உள்ளது. ஆனால், யாருக்கு வாக்களிக்கப் போகிறேன் என்பதை நான் சொல்லப்போவதில்லை; அது ரகசியம்என்று அவர் குறிப்பிட்டார்.மூன்று துணைத் தலைவர் பதவிகளுக்காக எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தற்போதைய துணைத் தலைவர்களான டத்தோ டாக்டர் ஜௌஜான் சம்பகோங், டத்தோ ஜூன்ஸ் வோங், டெரன்ஸ் சியாம்புன் ஆகியோரும் அடங்குவர்.மேலும், 2026-2029 காலப்பகுதிக்கான 20 உயர்மட்டக் குழு இடங்களுக்கு 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சபாவின் நலன்களை முன்னெடுத்துச் செல்லவும், வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகவும் கட்சிக்கு ஒரு வலுவான தலைமைத்துவக் குழு தேவைப்படுவதால், பிரதிநிதிகள் தங்கள் தலைவர்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஷாஃபி வலியுறுத்தினார். 16ஆவது பொதுத் தேர்தல்  எதிர்பார்ப்பதை விட முன்னதாகவே நடைபெறக்கூடும் என்பதால், இந்தத் தலைமைத்துவத் தேர்தல் மிக முக்கியமான தருணத்தில் நடப்பதாக அவர் கூறினார். இது இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ நடைபெற வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்ட அவர், 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கணிசமான நிதியைச் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here