சிரம்பான்,
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில அரசியல் நெருக்கடி தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகளை எதிர்பார்த்து, மந்திரி பெசார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று செய்தியாளர்கள் திரண்டுள்ளனர்.
எனினும், தற்போதைக்கு ஊடகவியலாளர்களைச் சந்திக்கப் போவதில்லை என இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.
“மன்னிக்கவும். தற்போதைக்கு என்னால் செய்தியாளர்களைச் சந்திக்க முடியாது. ஊடகவியலாளர் சந்திப்பையோ அல்லது ஊடக அறிக்கையையோ வெளியிடப் போவதில்லை. நன்றி,” என ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது பதவி விலகலைத் தொடர்ந்து தனக்குச் சிறிது கால அவகாசமும் தனிப்பட்ட இடைவெளியும் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று இஸ்மாயில் லாசிம் தனது ராஜினாமா கடிதத்தை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரிடம் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கடிதத்தின் நகலை தேசிய முன்னணித் தலைவரும் அம்னோ தலைவருமான டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி பெற்றுக்கொண்டதாக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் உறுதிப்படுத்தியிருந்தார்.
67 வயதான இஸ்மாயில் லாசிம், ஜுவாசே சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார். கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அவர் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராகப் பதவியேற்றிருந்தார்.
16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி 18 இடங்களையும் பெரிக்காத்தான் நேஷனல் 7 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. இதனையடுத்து, இரு கூட்டணிகளும் இணைந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மாநில அரசாங்கத்தை அமைத்திருந்தன.
இந்நிலையில், இஸ்மாயில் லாசிமின் திடீர் பதவி விலகலைத் தொடர்ந்து அடுத்த மந்திரி பெசாராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.



















