சென்னை, இயக்குநர் மிஷ்கின் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
மிஷ்கின் பாராட்டு
அப்போது பேசிய இயக்குனர் மிஷ்கின், “நாம் கீர்த்தி சுரேஷுக்கு ‘நடிகையர் திலகம்’ என்று பட்டம் கொடுக்கலாம். இனி அவரது பெயரைப் போடும்போது ‘நடிகையர் திலகம்’ கீர்த்தி சுரேஷ் என்று போடலாம். அந்த பட்டத்திற்கு அவர் தகுதியானவர். இந்த பட்டத்தை சூட்டுவதன் மூலம் அவர் தலையில் ஒரு கிரீடத்தை நான் வைத்துவிட்டேன்” என்றார்.
இதனிடையே மிஷ்கின் பேசும்போது, அருகில் அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷை தொட்டு தனது பாராட்டை தெரிவித்தார். தன்னை ‘நடிகையர் திலகம்’ என்று குறிப்பிட்டதால், கீர்த்தி சுரேஷ் சற்று தயக்கத்துடனேயே மிஷ்கினின் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.
வீடியோ
ஆனால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிலர், வீடியோவை ‘ஸ்லோ மோஷன்’(Slow motion) முறையில் எடிட்டிங் செய்து, அதை தவறான தொடுதல் போல் சித்தரித்துள்ளனர். இதனை நம்பி சமூக வலைதளங்களில் பலர் மிஷ்கின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
தந்தை-மகள் பிணைப்பு
இந்த நிலையில், சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டவர்களுக்கு கீர்த்து சுரேஷ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் முகத்தில் உங்களுக்கு எங்கே சங்கடம் தெரிகிறது? எங்களுக்கிடையே தந்தை, மகள் போன்ற ஒரு பிணைப்பு இருக்கிறது என்று நாங்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?
ஒருவேளை நான் சங்கடமாக உணர்ந்தேன் என்று வைத்துக்கொண்டாலும், திரைப்படங்களில் நடிகைகளை தொடுகிறார்கள் என்பதால் பொது இடங்கள் எங்களை தொடும்போதும் நாங்கள் இயல்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? நீங்கள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.























