–சாதனை படைத்தது இந்தியா
புதுடில்லி:
கொரோனா வைரஸ் தடுப்பூசியை, 10 கோடி பேருக்கு, குறைந்த நாட்களில் செலுத்தி, இந்தியா சாதனை படைத்துள்ளது. தடுப்பூசி நடவடிக்கை குறித்து, மத்தியசுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை, 10 கோடியை கடந்துள்ளது. வெறும், 85 நாட்களில், 10 கோடி பேருக்கு, நாம் தடுப்பூசியை செலுத்தி உள்ளோம்.இதே, 85 நாட்களில், அமெரிக்காவில், 9.2 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
சீனாவில், 6.1 கோடி பேருக்கும், பிரிட்டனில், 2.1 கோடி பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டன.அமெரிக்காவில், 89 நாட்களிலும், சீனாவில், 102 நாட்களிலும், 10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இவ்வளவு குறைந்த நாட்களில், 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி நாம் சாதனை படைத்து உள்ளோம்.ஒரு நாளுக்கு, 38.93 லட்சம் டோஸ் என்ற சராசரி எண்ணிக்கையில், நம் நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.















