– சுங்கத்துறை கைப்பற்றி விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் நேற்று அதிகாலையில் சில மூட்டைகள் கடலில் மிதந்தன. இந்த மூட்டைகள் காற்றின் வேகம் , கடல் நீரோட்ட வேகத்தால் மண்டபம் தி.நகர் கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்தன.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மண்டபத்திலுள்ள சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று கரை ஒதுங்கி கிடந்த மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.
அப்போது அந்த மூட்டைகளில் மஞ்சள் இருப்பது தெரியவந்தது. 8 மூட்டைகளில் இருந்த சுமார் 320 கிலோ மஞ்சளை கைப்பற்றிய சுங்கத்துறையினர் அதை அலுவலகம் கொண்டு சென்றனர்.
மண்டபம் கடலில் மிதந்து வந்த மஞ்சள் மூட்டைகளை ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து கடத்தல்காரர்கள் படகில் இலங்கை நோக்கி கடத்தி கொண்டு சென்றிருக்கலாம் எனவும், அப்போது இந்திய கடற்படை அல்லது கடலோர காவல் படையினர் ரோந்து கப்பலை கண்டதும் மஞ்சள் மூட்டைகளை கடலில் வீசிவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.