கோலாலம்பூர், ஆக. 15 – பதவி விலக துன் மகாதீருக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டாமென பிரிபூமி பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினர் தாரிக் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
தவணை முடியும் முன்னரே பதவியை விட்டு விலகக் கேட்டுக் கொள்ள வேண்டாமென அவர் வலியுயுறுத்தினார்.
ஜோகூர் பிகேஆரின் ஹசான் கரீம், மகாதீர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென அறைகூவல் விடுத்ததைக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த மகாதீருக்கு கால அவகாசம் தர வேண்டும். அன்வார் பிரச்சினை இல்லாத சூழ்நிலையையே விரும்புவார் என குறிப்பிட்டார்.
துன் போன்ற ஒரு பலமான தலைவரே பொருளாதாரத்தைச் சீர்படுத்த முடியும். மேலும், இனம், சமயம் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்காவிட்டால், பொருளாதாரப் பிரச்சினைகள் எழும்.
எனவே, பிரதமர் பதவிப் பிரச்சினையைப் பெரிது படுத்தி சிக்கலை உருவாக்க வேண்டாமென அவர் ஹசானை கேட்டுக் கொண்டார்.
இதனிடையே சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழில்துறை மேம்பாட்டு அமைச்சருமான ரெட்சுவான் யூசோப், ஹசான் பொறுமை காக்க வேண்டுமென்றும் மகாதீர் பொருளாதாரத்தை சீர்படுத்தி ஆட்சியை அன்வாரிடம் நிச்சயமாக ஒப்படைப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியினருடன் சந்திப்பு, மாற்றங்களைக் கொண்டு வருவதில் மெத்தனம், பதவியை மாற்றிக் கொடுப்பதில் சிக்கல் போன்ற பிரச்சினைகள் பக்காத்தான் ஹராப்பானுக்குப் பெரும் சவாலாக அமையலாம் என அவர் எச்சரித்தார்.