சட்டப்பேரவையில் அறிவித்தப்படி பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்

பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று பால்கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தினசரி 2 கோடி லிட்டர்  பால் உற்பத்தியாகிறது. இதில் 1.76 கோடி லிட்டர் பால் விற்பனைக்கு வருகிறது. ஆவின் நிறுவனம் மட்டும் சுமார் 37 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு, சமன்படுத்தப்பட்டு 200 மி.லி., 500 மி.லி, 1000 மி.லி. அளவு கொண்ட பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உள்ளூர் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 12.71 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பால்விலையை லிட்டருக்கு 10 வரை உயர்த்தினார். அதன் பின், சட்டசபையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் பால் விலையும் உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது; அதனால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4.60 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில்,

பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாகவும், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாகவும், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வினால் டீ, காபி, பால் பொருட்கள் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பால் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்கள் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, பால் போக்குவரத்துக்கான செலவுகள் உயர்ந்து உள்ளதால் பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டப்பேரவையில் அறிவித்தபடி பால் கொள்முதல், பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றார். பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன; உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார். பால் கூட்றவு சங்கங்களுக்கு ஊக்கத்தொகை தமிழ்நாட்டில் தான் அதிகம் தரப்படுகிறது. மேலும், மழை அளவை பொறுத்துதான் மேட்டூர் அணையில் நீர் திறப்பு உயர்த்தப்படும் என்றும் கனமழை சமாளிக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here