விண்வெளிக்கு ரோபோ மனிதனை அனுப்பி ரஷ்யா சோதனை

மாஸ்கோ

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள வீரர்களுக்கு உதவும் வகையிலும், விண்வெளி நடை மேற்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் ‘பெடர்’ என்ற ரோபோ மனிதனை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இதன் உயரம் 5 அடி 11 அங்குலம். எடை 160 கிலோ. இதற்கு ‘ஸ்கைபாட் எப்850’ என்ற அடையாள எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘பெடர்’ ரோபோவை,  சோயுஸ் எம்-14 விண்கலம் மூலம், கஜகஸ்தானில் உள்ள ஏவுதளத்திலிருந்து ரஷ்யா நேற்று காலை அனுப்பியது. வழக்கமாக சோயுஸ் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள். இந்த முறை, சோதனை ரோபோ அனுப்பப்பட்டுள்ளது. விண்கலத்தின் பைலட் இருக்கையில் கட்டப்பட்டிருந்த ரோபோ தனது கையில் ரஷ்ய கொடி ஒன்றையும் வைத்திருந்தது. சோயுஸ் விண்கலம் ஏவுதளத்தில் இருந்து புறப்படும்போது, ‘நாம் புறப்படலாம் (லெட்’ஸ் கோ) என ரோபோ கூறியது. இது விண்வெளிக்கு முதலில் சென்ற ரஷ்ய வீரர் யூரி காகரின் கூறிய வார்த்தை. இந்த பெடர் ரோபோவுக்கு இஸ்டாகிராம், டிவிட்டர் கணக்குகளும் உள்ளன. பெடர் ரோபோ விண்வெளியில் கற்றுக்கொள்ளும் விஷயங்களை  இதில் தெரிவிக்கும்.

குறைந்த புவியீர்ப்பு விசையில் எப்படி செயல்படுவது, தண்ணீர் பாட்டீலை எப்படி திறப்பது போன்ற செயல்களை இந்த ரோபோ பரிசோதித்து பார்க்கும். ஸ்கூரு டிரைவர், ஸ்பானர், தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது, சர்வதேச விண்வெளி மையத்தில் மின் வயர்களை இணைப்பது, துண்டிப்பது போன்றவற்றையும் இந்த ரோபா பரிசோதித்து பார்க்கும். சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த மாதம் சென்ற ரஷ்ய வீரர் அலெக்ஸ்சாண்டர் ஸ்கோட்சோவின் மேற்பார்வையில் இந்த ரோபோ பணிகளை மேற்கொள்ளவுள்ளது. மனிதனின் செயல்களை அப்படியே செய்யும் இந்த ரோபோ, விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு வகையில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி நடை போன்ற ஆபத்தான பணிையும், இந்த ரோபோ மேற்கொள்ளும் என ரஷ்ய விண்வெளி மைய இயக்குனர் பிளாஸன்கோ தெரிவித்தார். விண்வெளியை மிக ஆழமாக ஆராயும் பணிகளுக்கு, இந்த வகை ரோபோக்களை எதிர்காலத்தில் பயன்படுத்த ரஷ்ய விண்வெளித்துறை திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு ரோபோ அனுப்பப்படுவது இது முதல் முறை அல்ல. நாசா கடந்த 2011ல் ‘ரோபோனட்-2’ என்ற ரோபோவை அனுப்பியது. இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இது கடந்த ஆண்டு பூமிக்கு திருப்பி கொண்டுவரப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டில், ஜப்பானும் ‘கிரோபோ’ என்ற சிறிய ரோபோவை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here