ஜாவி ஓவிய எழுத்துக் கல்விக்கு எதிராக மறியல் – ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

பிரிக்பீல்ட்ஸ்

2020ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில் மலாய்மொழி பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஜாவி ஓவிய எழுத்துக் கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்ததை அடுத்து நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பின.

இதனை அடுத்து, பெற்றோர்கள் சம்மதித்தால் இக்கல்வியை அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் பயிலலாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கல்வி ஒட்டுமொத்தமாக தாய்மொழிப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கக் கூடாது எனக் கோரி மலேசிய இந்தியர் கல்வி உருமாற்ற அமைப்பின் தலைமையில் இன்று பிரிக்பீல்ட்ஸ் கோலாலம்பூரில் அமைதி மறியல் ஒன்று நடத்தப்பட்டது.

இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த அமைதி மறியலில் நாடு தழுவிய அளவிலிருந்து சுமார் 1000க்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர். சுமார் 8 மணி வரையில் நடந்த இப்பேரணியில் பல இந்தியர் அமைப்புகளோடு சில அரசியல் தலைவர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இந்த அமைதி மறியல் நடத்தப்படுவதற்கு புக்கிட் அமானின் பெர்மிட் கிடைக்காத நிலையில், இந்தப் பேரணி கட்டாயம் நடந்தேறும் என காலையில் இதன் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அதே போல சரியாக 7 மணிக்கு இம்மறியல் தொடங்கப்பட்ட வேளை சுமார் 30 பேர் கொண்ட போலிஸ் அதிகாரிகள் இம்மறியல் நடந்த இடத்திற்கு வந்து, இது அதிகாரப்பூர்வமான மறியல் அல்ல, இங்கு கூடுவதற்கு பெர்மிட் இல்லை. ஆகவே அனைவரும் அமைதியாக கலைந்து சென்றுவிடுங்கள் என அறிவிப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு கூடியதற்கான நோக்கத்தை விளக்க 20 நிமிடங்கள் போலிசாரால் வழங்கப்பட்ட நிலையில், இந்த மறியலின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் உமா காந்தன் போலிசாரால் விசாரிக்கப்பட அழைத்துச் செல்லப்பட்டார்.

வழங்கப்பட்ட உரைக்குப் பின்னர், இம்மறியலுக்கு வந்திருந்தவர்கள் அமைதியாக கலைந்துச் சென்றனர்.

இதுகுறித்து பேசிய கோலாலம்பூர் போலிஸ் தலைவர் மஸ்லான் லாசிம், இந்த விவகாரம் தீர்க்கப்பட்ட ஒன்று. இதற்கு எதற்கு மறியல். இம்மறியலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் யாரும் இதில் கலந்துக் கொள்ளாதீர்கள் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மதியம் 2 மணி முதல் 4 மணி வரையில் “Say No To Zakir Naik, equal rights to Indians and other races” எனும் மறியலும் நடைப்பெறும் என அதன் ஏற்பாட்டுக் குழுவினரும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here