கோத்தா பாரு:
நீண்டகால மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களின் நிதிச் சுமையை அரசாங்கம் உணர்ந்துள்ளது என்றும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி அகமட் தெரிவித்தார்.
கம்போங் பாவுங் பாயாம் பகுதியில் திங்கட்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம் இதுவரை 84,000 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இதற்காக அரசாங்கம் சுமார் 788 மில்லியன் ரிங்கிட் செலவிட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 3,884 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 58.6 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதிப் பிரச்சினையால் யாரும் சிகிச்சை பெறாமல் இருக்கக்கூடாது என்பதே அமைச்சின் நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
ரமலான் மாத உணவுக் கடைகள் குறித்து இதுவரை நாடு தழுவிய அளவில் 12 புகார்கள் மட்டுமே வந்துள்ளன. நச்சுணவுப் பாதிப்புகளோ அல்லது அபராத நடவடிக்கைகளோ இதுவரை பதிவாகவில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.
காசநோய் தொற்று பாதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, 482-லிருந்து 417-ஆகக் குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.




















