கல்லூரிக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் கைது

அரா டாமான்சாரவில் இயங்கும், ஒரு தனியார் பயிற்சி நிறுவனமான ‘அட்வான்ஸ் ஏரோநோதிக் டிரெய்னிங் செண்டர்’ (Advanced Aeronautic Training Centre) நிர்வாகத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவர்களைப் போலீசார் இன்று கைது செய்தனர்.

அவர்களுடன், எட்டாவது நபராக, கல்லூரி மாணவர் சங்கத்தின் ஆலோசகரான மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர், ஷரன் ராஜ் கைது செய்யப்பட்டார்.

மாணவர் சங்கத்தை உடைக்க முற்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று பி.எஸ்.எம். தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“பயிற்சி மையத்தின் உரிமையாளர், மாணவர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து, அவர்களைக் கைது செய்யுமாறு போலிசாரை அழைத்துள்ளார்.

“கைது செய்யப்பட்டவர்கள் கிளான ஜெயா காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்,” என்று சிவராஜன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தி வழியாகத் தொடர்பு கொண்டபோது, மாலை 5 மணியளவில் அவர்கள் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாக சரண்ராஜ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில், பயிற்சி மையத்தைச் சேர்ந்த 90 மாணவர்கள் கலந்து கொண்டதாக அவர் மேலும் சொன்னார்.

மாணவர் சங்கம் அமைப்பதில் ஈடுபட்டதற்காக, இரண்டு மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டதன் காரணமாகவே இந்த ஆர்ப்பாட்டம் வெடித்ததாக மாணவர்கள் கூறினர்.

பெட்டாலிங் ஜெயா துணைப் போலீஸ் தலைவர் கு மஷரிமன் கு மஹ்மூட், மாணவர்கள் கைது செய்யப்பட்டதை ஓர் அறிக்கை வழி உறுதிப்படுத்தினார்.

ஒரு பொது ஊழியர் தன் கடமையைச் செய்வதிலிருந்து தடுக்கும், தண்டனைச் சட்டம் பிரிவு 186-ன் கீழ், அந்த எட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கு மஷரிமன், ஆர்ப்பாட்டத்தில் 50 பேர் ஈடுபட்டதாகவும், அவர்களுக்குச் சரண்ராஜ் தலைமை ஏற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த இரண்டு மாணவர்களும் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதற்குக் கட்டணம் செலுத்தாததே காரணம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here