டெல்லி
அமலாக்கப்பிரிவு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம். தள்ளுபடி செய்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ 305 கோடி வெளிநாட்டு நிதியை பெற்றது. இதற்காக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ 2017-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என கோரி முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி , சிதம்பரத்தின் முன்ஜாமீன் கொடுக்க கடந்த 20-ஆம் தேதி மறுப்பு தெரிவித்தார். இதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கமுடியாது என தெரிவித்தனர். மேலும் முன்ஜாமீனை மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சிதம்பரத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிந்த பின் அவரை கைது செய்ய செய்ய கீழ் நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகலாம். அமலாக்கத்துறை திரட்டியுள்ள அனைத்து ஆதாரங்களையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. முன்ஜாமீன் அளிப்பதை அடிப்படை உரிமையாக கோர முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை விவரங்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கமான ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டது ஏன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம அளித்துள்ளனர். அமலாக்கப்பிரிவு வழக்கில் தற்போது ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முன்ஜாமீன் வழங்குவதற்கு பொருத்தமான வழக்கு இது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத் துறை வழக்கில் உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.