மைசூரு – தென் ஆப்ரிக்கா ஏ அணியுடனான 2வது டெஸ்ட்(அதிகாரப்பூர்வமற்றது) டிராவில் முடிந்ததை அடுத்து, இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மைசூரு, நரசிம்ம ராஜா மைதானத்தில் நடந்த இப்போட்டியின் (4 நாள்) முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 417 ரன் குவித்து ஆல் அவுட்டானது (123 ஓவர்). ஷுப்மான் கில் 92, கருண் நாயர் 78, கேப்டன் சாஹா 60, ஷிவம் துபே 68, ஜலஜ் சக்சேனா 48* ரன் விளாசினர்.அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்து (109.3 ஓவர்) அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேப்டன் எய்டன் மார்க்ராம் 161 ரன், டி புருயின் 41, வியான் முல்டர் 131* ரன் விளாசினர். இந்தியா ஏ பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 29 ஓவரில் 3 மெய்டன் உட்பட 121 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஷாபாஸ் நதீம் 3, முகமது சிராஜ் 2, துபே 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 17 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்த நிலையில் (70 ஓவர்) ஆட்டம் டிராவில் முடிந்தது. தொடக்க வீரர் பிரியங்க் பாஞ்ச்சால் 109 ரன் (192 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். ஈஸ்வரன் 37 ரன் எடுக்க, ஷுப்மான் கில் டக் அவுட்டானார். கருண் நாயர் 51 ரன், சாஹா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மார்க்ராம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஏற்கனவே திருவனந்தபுரத்தில் நடந்த முதல் டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்த இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.