அஸ்மின் அலி காணொளி: சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும்!

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியுடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியில் உள்ள நபரின் அடையாளம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மலேசிய காவல் துறை நம்புகிறது.

இந்த காணொளி காட்சிகள் பகுப்பாய்வுக்காக அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

அந்தப் பதிவின் நம்பகத்தன்மையும், அதில் ஈடுபட்டவர்களின் அடையாளத்தையும் அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காவல் துறை அதிகாரிகள் சமீபத்தில் அமெரிக்காவிற்குச் சென்றனர். அவர்கள் திரும்பியும் வந்துள்ளனர். பகுப்பாய்வு அறிக்கை காவல் துறையுடம் விரைவில் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.

முடிவு எப்போது வெளியிடப்படும் என்று கேட்கப்பட்டதற்கு, “இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும்என்று ஹுசிர் பதிலளித்தார்.

முன்னதாக, அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி கடந்த ஜூன் 11-ஆம் தேதி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காணொளியை மறுத்து, இது தமக்கு எதிராக நடத்தப்பட்ட அரசியல் தாக்குதல் என்று அஸ்மின் அலி குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here