ஊடகவியலாளர்களை கௌரவித்த கேகேஆர் சிஐடிபி

கோலாலம்பூர் –

மலேசிய பொதுப்பணித் துறை அமைச்சும் (கேகேஆர்) மற்றும் மலேசிய கட்டுமான தொழில் துறை வளர்ச்சி வாரியமும் (சிஐடிபி) இணைந்து ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் ஏஎம்பி 2019 எனும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

5ஆவது முறையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை மற்றும் சிஐடிபி சம்பந்தப்பட்ட அச்சு ஊடகங்களில் சிறந்த கட்டுரை- செய்தி, சிறந்த இணைய தள (ஆன் லைன்) ஊடகப் பதிவு, சிறந்த புகைப்படம் என 3 பிரிவுகளில் ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் நிலை வரிசையில் விருதுகள் வழங்கப்பட்டன.

மூன்று பிரிவுகளிலும் முதல் நிலை பரிசாக வெ. 5,000, இரண்டாவது நிலை பரிசாக வெ.3,000, மூன்றாவது நிலை பரிசாக 2,000 வெள்ளியும் வழங்கப்பட்டன. அச்சு ஊடகங்களில் சிறந்த கட்டுரை- செய்தி பிரிவில் முதல் பரிசை பெரித்தா ஹரியான் செய்தியாளர் வான் நூர் ஹயாத்தி வென்றார். சிறந்த இணைய தள (ஆன் லைன்) ஊடகப் பதிவு பிரிவில் பெர்னாமா செய்தி பிரிவைச் சேர்ந்த முகமட் நூர், முகமட் அஸ்மிரூல், முகமட் அணியினர் முதல் இடத்தை வென்ற வேளையில் தி ஸ்டார் புகைப்பட கலைஞர் சென் சுன் லிங் எடுத்த புகைப்படம் சிறந்த புகைப் படமாக தேர்வு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்ட பொதுப்பணித் துறை அமைச்சர் பாரு பியான், மலேசிய கட்டுமான தொழில் துறை வளர்ச்சி வாரிய தலைமை செயல் அதிகாரி டத்தோ டாக்டர் அகமட் அஸ்ரி ஆகிய இருவரும் வெற்றியாளர்களுக்கு விருதினையும் மாதிரி காசோலையையும் வழங்கி கௌரவித்தனர். மேலும் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாடும் திறன் மற்றும் சிறந்த உடை பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பேசிய அமைச்சர், ஊடகவியலாளர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் பங்கு அளப் பரியது. அவர்கள் தினமும் பல சவால்களை எதிர் கொள்கின்ற போதிலும் தளராமல் தங்கள் கடமையை செய்கின்றனர் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய டாக்டர் அகமட் அஸ்ரி, நாட்டின் கட்டுமானத் துறை அனைத்துலக அளவில் மிளிர அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஊடகங்களும் முக்கிய பங்கு வழங்குகின்றன.

இத்துறையின் வளர்ச்சி குறித்த தகவல்களை அவர்கள் தொடர்ந்து வெளியிடுவதால் மக்கள் மத்தியிலும் தெளிவு பிறக்கின்றது என கருத்துரைத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களை மகிழ்விக்கும் வகையில் அதிர்ஷ்ட குலுக்களும் நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here